இறைச்சி விற்கலாம்.. ஆனாக்கா..! – ரூல்ஸை அள்ளிவிட்ட கோவை மாநகராட்சி!
தமிழகம் முழுவதும் இறைச்சி விற்பனை செய்யும் கடைகளை மூட மாவட்ட நிர்வாகங்கள் முடிவெடுத்து வரும் நிலையில் கோவை மாநகராட்சி சில விதிமுறைகளுடன் இறைச்சி கடைகளை இயங்க அனுமதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பல அத்தியாவசிய கடைகளில் சமூக இடைவெளிகள் பின்பற்றப்பட்டாலும், இறைச்சி கடைகளில் மட்டும் சமூக இடைவெளி பேணுவது கடினமான காரியமாகவே இருந்து வருகிறது. தொடர்ந்து கறிகளை தொங்கவிட்டு விற்பது போன்றவற்றால் சுகாதாரக் கேடு ஏற்படலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இறைச்சி விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சி சில நிபந்தனைகளோடு இறைச்சி கடைகள் செயல்பட அனுமதித்துள்ளது.
அதன்படி, சந்துக்களில், குறுகிய தெருக்களில் உள்ள இறைச்சி கடைகள் செயல்படக்கூடாது.
இறைச்சி வாங்க வரும் வாடிக்கையாளர்களை 30 வினாடிகளுக்கு மேல் காத்திருக்க செய்ய கூடாது.
இறைச்சியை கட்டி தொங்க விடுதல், வாடிக்கையாளர்கள் முன்பே வெட்டுதல் போன்றவற்றை செய்யக்கூடாது.
குடல், ஈரல், ரத்தம் போன்றவற்றை முன்பே பார்சல் செய்து வைத்திருந்து வாடிக்கையாளர்களுக்கு அளிக்க வேண்டும்.
முடிந்த அளவுக்கு வாடிக்கையாளர்களுக்கு வீடுகளுக்கே சென்று டோர் டெலிவரி செய்ய இறைச்சி விற்பனையகங்கள் முயற்சி செய்ய வேண்டும்.
இவற்றை பின்பற்ற தவறும் இறைச்சி கடைகள் பூட்டி சீல் வைக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.