1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 25 அக்டோபர் 2022 (13:26 IST)

முபின் வீட்டில் இருந்த மர்ம பொருள்? பயங்கரவாதிகளுடன் தொடர்பு? – கோவை கார் வெடிப்பு சம்பவம்!

bomb blast
கோவையில் கார் வெடித்த சம்பவத்தின் பிண்ணனியில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை கோவை மாநகரின் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியான ஈஸ்வரன் கோவில் வீதியில் கார் ஒன்று வெடித்து சிதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் ஜமேஷா முபின் என்ற நபர் உடல் சிதறி பலியானார்.

இந்த விபத்து குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு கோவைக்கு நேரடியாக சென்று விசாரணையை மேற்கொண்டார். இந்த வழக்கில் வெளியாகியுள்ள பல தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. உயிரிழந்த முபினின் வீட்டருகே உள்ள சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் முபினும் இன்னும் 4 நபர்களும் சேர்ந்து சில பொருட்களை காரில் ஏற்றும் காட்சிகள் கிடைத்துள்ளது. அதை கொண்டு போலீஸார் அந்த மற்ற நபர்களை தேடி வந்தனர்.


இந்த வழக்கில் தற்போது முபின் வீட்டிலிருந்து வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் முகமது தல்கா என்பவரும் ஒருவர்.கோவையில் 1998ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தடை செய்யப்பட்ட இயக்கமான அல் உம்மா இயக்கத்தை சேர்ந்த பாட்ஷாவின் தம்பியான நவாப்கானின் மகன்தான் தற்போது இந்த வழக்கில் கைதாகியுள்ள முகமது தல்கா. இவரது தந்தை நவாப் கான் 1998 கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்.

coimbatore


தற்போது நடந்த கார் வெடிப்பில் சம்பந்தப்பட்ட கார் முகமது தல்காவினுடையது என்றும், அதை தல்கா இறந்துபோன முபினுக்கு அளித்ததும் தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து அவர்கள் காரில் எடுத்து சென்ற மர்ம பொருள் என்ன? வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் கோவையில் மட்டுமல்லாது தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கோவையில் போலீஸ் பாதுகாப்பு அத்கரிக்கப்பட்டுள்ளதுடன், துணை ராணுவப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edited By Prasanth.K