1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (11:07 IST)

வடிகால் பணிகள் காரணமாகதான் பாதிப்பு குறைவாக உள்ளது… முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு!

கோப்பு படம்

நேற்று முழுவதும் சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் சென்னை முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டது. பள்ளிக்கரணை மற்றும் வேளச்சேரி போன்ற பகுதிகளில் வெள்ளம் அதிகமாகி, குடியிருப்புப் பகுதிகளில் புகுந்தன. மழைநீர் வழிய இடம் இல்லாமல் பல இடங்களில் தேங்கி நின்றதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். கடற்கரையில் புயல் காற்று காரணமாக கடலில் வெள்ள நீர் உள்செல்ல முடியவில்லை என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது மழை குறைந்துள்ள நிலையில் மேடான பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. தாழ்வான பகுதிகளிலும் பம்புகள் மூலமாக தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 4000 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் மழைநீர் வடிகால் சமீபத்தில் அமைக்கப்பட்டும் வெள்ளப் பெருக்கை தடுக்க முடியவில்லை.

இந்நிலையில் வெள்ள பாதிப்பு குறித்து பேசியுள்ள முதல்வர் மு க ஸ்டாலின் “4000 கோடி ரூபாய் செலவில் அரசு செய்த வடிகால் பணிகள் காரணமாகதான் வரலாறு காணாத மழையிலும் பாதிப்புகள் அதிகளவில் ஏற்படவில்லை. 2015 ஆம் ஆண்டு பெய்த பெருமழையை விட நேற்று அதிக மழை பெய்துள்ளது. அரசின் நடவடிக்கைகளால் பாதிப்புகள் குறைந்துள்ளன. 2015 ஆம் ஆண்டு ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் ஏற்பட்ட செயற்கை வெள்ளம். ஆனால் இது இயற்கை வெள்ளம்.

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால் தற்போது அதைவிட அதிக மழை பெய்தும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது.” எனக் கூறியுள்ளார்