1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2017 (16:12 IST)

அனிதா மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சர்ச்சை அறிக்கை!

அனிதா மரணம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சர்ச்சை அறிக்கை!

நீட் தேர்வினால் தனது மருத்துவர் கனவு கலைந்து போனதால் மனம் உடைந்த மாணவி அனிதா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
தாயை சிறு வயதிலேயே இழந்த ஏழ்மையான கூலித்தொழிலாளியின் மகளான அனிதா மாநில பாடத்திட்டத்தின் கீழ் மருத்துவப்படிப்புக்கு 196.7 கட் ஆஃப் மதிப்பெண் பெற்று மருத்துவர் ஆக வேண்டும் என கனவு லட்சியத்தோடு இருந்தார்.
 
ஆனால் அவரது கனவை மத்திய அரசு கொண்டுவந்த நீட் தேர்வு கலைத்தது. இதனால் உச்ச நீதிமன்றம் வரை சென்று மாணவி அனிதா போராடினார். தனது மருத்துவர் கனவை நிறைவேற்ற பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் நீதிமன்றமும் கைவிட அனிதாவின் மருத்துவர் கனவு கனவாகவே போனது. மனம் உடைந்த அனிதாவும் தற்கொலை செய்துகொண்டு காற்றில் கலந்துவிட்டார்.
 
இவரது மரணத்திற்கு மத்திய, மாநில அரசுகளும், நீட் தேர்வுமே காரணம் என மக்கள் தங்கள் கண்டனங்களை கூறி வருகின்றனர். அரசியல் கட்சியினர், திரையுலகத்தினர், சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் என பலரும் கண்டனங்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனிதாவின் மரணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அனிதாவின் மரணச் செய்தியை கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


 
 
மாணவின் அனிதாவின் குடும்பத்துக்கு 7 லட்சம் ரூபாய் நிவாரண நிதியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க உள்ளதாக கூறியுள்ளார். மாணவர்கள் யாரும் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
 
ஆனால் தனது அறிக்கையில் ஒரு இடத்தில் கூட அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வு குறித்து முதல்வர் குறிப்பிடவில்லை. முதல்வரின் இந்த அறிக்கை பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இதற்கு கண்டனங்கள் வருகின்றன.