1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (16:34 IST)

அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் இடையே மோதல்: சசிகலா அணியில் குழப்பம்!

அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் இடையே மோதல்: சசிகலா அணியில் குழப்பம்!

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார் டிடிவி தினகரன். இதனையடுத்து அதிமுக அம்மா அணியில் உள்ள அமைச்சர்களிடையே கருத்து மோதல் எழுந்துள்ளது.


 
 
சென்னை சென்றவுடன் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபடுவேன் என டெல்லி விமான நிலையத்தில் தினகரன் பேட்டியளித்தார். இதனையடுத்து இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நாங்கள் பார்க்கவோ, வரவேற்கவோ செல்ல மாட்டோம் என கூறினார்.
 
அதன் பின்னர் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் தினகரன் கட்சி பணிகளில் ஈடுபடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே முடிவெடுப்பார் எனவும், தினகரனை பார்க்க மாட்டோம் என நிதியமைச்சர் ஜெயக்குமார் கூறிய கருத்துதான் எங்கள் கட்சியின் கருத்து எனவும் கூறினார்.
 
ஆனால் இதற்கு பின்னர் பேட்டியளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அப்படியே அமைச்சர் செங்கோட்டையன் பேசிய பேச்சுக்கு எதிராக பேசி தனது கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்தினார். ஜாமீனில் வந்துள்ள தினகரன் கட்சிப் பணிகளில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளதில் 100 சதவிகிதம் உண்மை உள்ளது.
 
தினகரன் கட்சிப் பணியாற்ற முழு உரிமை உண்டு. அவரை யாரும் கட்சியிலிருந்து நீக்கவில்லை. அவராகத்தான் கட்சியிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். அவரை நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உள்ளது. தினகரனை நாங்கள் பார்க்கவோ அல்லது வரவேற்கவோ செல்ல மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளது அவரது சொந்தக் கருத்து. அது கட்சியின் கருத்தல்ல என்றார்.
 
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் இடையே உள்ள இந்த கருத்து மோதல் சசிகலா அணியில் உள்ள அமைச்சர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூ இது குறித்து எந்த கருத்தும் கூற மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.