காரில் இருந்து இறங்கி வந்து அமமுக நிர்வாகியை நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அசோக் நகரில் மழை நீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார், அதன்பின்னர் தன் காரில் சென்று கொண்டிருக்கும்போது வணங்கிய அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர். சரஸ்வதியை பார்த்து உடனே காரில் இருந்து கீழிறங்கி வந்து அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
இதுபற்றி நடிகையும் அமமுக கொள்கை பரப்புச் செயலாளருமான சி.ஆர்.சரஸ்வதி கூறியதாவது:
நான் அம்மாவுடன் 15 வருடங்கள் அரசியலில் இருந்திருக்கிறேன். இப்போது அமமுக கட்சியில் இருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும். இன்று டி.டி.வி. தினகரன் சார் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இப்போதுதான் திரும்பினேன். என் வீடு இங்குதான் உள்ளது. நிறைய போலீஸ் இருக்கும்போது சிஎம் வருவதாக கூறினார்கள். எதிர்க்கட்சியாக இருந்தாலும் அவர் எல்லோருக்கும் சிஎம். காரில் இருந்து இறங்கி வந்து அவர் என்னிடம் எப்படி இருக்கிறீர்கள்? இந்த ஏரியாவில் உள்ள பிரச்சனைகள் சரிசெய்யப்படும்? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
காரில் இருந்து இறங்கி வந்து நலம் விசாரித்து, பிரச்சனைகளை தீர்ப்பதாக கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. என்று கூறினார்.