1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (16:16 IST)

164 ஆண்டுகள் பழமையான ரயில்: சென்னையில் ஜாலி பயணம்!

இந்தியாவின் மிக பழமையான நீராவி இஞ்சின் ரயில் ஒன்று நாளை சென்னையில் தன் பயணத்தை தொடங்க இருக்கிறது.

இந்தியாவில் இரயில் வழி சேவை ஆரம்பித்த போது நீராவி இஞ்சின்களே புழகத்தில் இருந்தன. அப்போது 1855ம் ஆண்டு தயாரான இஞ்சின்தான் ’இஐஆர்21’. சுமார் 50 ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்தியாவின் பல ரயில் வழி பாதைகளில் பயணித்த இந்த இஞ்சின் நிலக்கரி இஞ்சின்களின் வருகைக்கு பிறகு அருங்காட்சியகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பிறகு சமீபத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புதுப்பொலிவு பெற்ற நீராவி இஞ்சின் வருடத்தில் இரண்டு முறை மட்டும் மக்களின் பார்வைக்காக இயக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை எழும்பூர் முதல் கோடம்பாக்கம் வரை தனது பயணத்தை தொடங்கி இருமுறை பயணித்து முடித்து கொள்ள இருக்கிறது ‘இஐஆர்21’.

மிகவும் பழமையான நீராவி எஞ்சின் என்பதால் 40 பேர் பயணிக்கும் அளவுள்ள பெட்டி மட்டுமே இணைக்கப்பட உள்ளது. பழங்கால ரயில் செல்வதை பார்க்கவும், பயணிக்கவும் மக்கள் பலர் ஆர்வமாக காத்துள்ளனர். ஆனால் 40 பேர் மட்டுமே ஒருமுறை பயணிக்க கூடிய இந்த ரயிலுக்கு முன்பதிவு கிடையாது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற ரீதியில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட்டுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பழங்கால ரயிலில் பயணிக்க சிறுவர்களுக்கு ரூ.300, பெரியவர்களுக்கு ரூ.500 மற்றும் வெளிநாட்டவருக்கு ரூ.1000 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.