திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 மே 2022 (11:17 IST)

தொழிலதிபர் தம்பதியினர் கொலை; 1000 சவரன் நகைக் கொள்ளை! – சென்னையில் விபரீதம்!

சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த வெளிமாநில தொழிலதிபரை கொன்ற வழக்கில் கைதான டிரைவர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள துவாரகா காலணி பகுதியில் சொகுசு வீட்டில் வாழ்ந்து வந்தவர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா. குஜராத்தில் பிரபலமான ஐடி கம்பெனியை நடத்தி வந்த இவர், ஆடிட்டராகவும் இருந்துள்ளார்.

இவரிடம் பதம்லால் கிருஷ்ணா என்பவர் டிரைவராக நீண்ட நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில நாட்கள் முன்னதாக ஸ்ரீகாந்த் தனக்கு சொந்தமான இடம் ஒன்றை விற்று ரூ.40 கோடி பணம் வைத்திருந்தது பதம்லால் கிருஷ்ணாவுக்கு தெரிய வந்துள்ளது.

அதை திருட பதம்லால் அவரது நண்பரான டார்ஜிலிங்கை சேர்ந்த ரவியுடன் திட்டமிட்டுள்ளார். பின்னர் சம்பவத்தன்று வீட்டிற்குள் நுழைந்த இருவரும் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். பின்னர் அலமாரியை திறந்து பார்த்தபோது அதில் பணம் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் வேறொறு லாக்கரில் ஆயிரம் சவரன் நகை, வெள்ளி பிஸ்கட்டுகள் இருப்பதை கண்ட அவர்கள் அதை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் நடந்து 6 மணி நேரத்திற்குள் போலீஸார் சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்ற இருவரையும் ஆந்திர போலீஸ் உதவியுடன் ஓங்கோல் பகுதியில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகைகள், வெள்ளி பிஸ்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பிடிபட்ட பதம்லாலிடம் விசாரணை மேற்கொண்டபோது, இந்த கொள்ளை சம்பவத்திற்காக நீண்ட காலமாக திட்டமிட்டதாகவும், 10 நாட்களுக்கு முன்பே தம்பதிகளை கொன்று புதைப்பதற்கு குழி வெட்டி தயாராக வைத்திருந்ததாகவும் கூறியது போலீஸாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.