நேரு மைதானத்தில் ரெம்டெசிவிர்; ஒருநாளைக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி!
நாளை முதல் சென்னை நேரு மைதானத்தில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்பட உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி என கூறப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால் அதை வாங்க மக்கள் பெருமளவில் வருவதால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் வைத்து விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் ரெம்டெசிவிர் மருந்துகள் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேரு மைதானத்தின் சிறப்பு ஆண்கள் விளையாட்டு விடுதியில் ரெம்டெசிவிர் விநியோகிக்கப்படும் என்றும், ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே விநியோகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்து வாங்க வருபவர்கள் 5ம் எண் நுழைவு வாயிலாக வந்து மருந்தை வாங்கிய பின் 4ம் எண் வாசல் வழியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.