ஆன்லைன் ரம்மியில் ரூ.15 லட்சம் இழப்பு.. 51 வயது சென்னை நபர் தற்கொலை!
ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணம் இழந்து ஏராளமானோர் தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் சென்னை சேர்ந்த 51 வயது நபரும் ஆன்லைனில் 15 லட்சத்தை இழந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சென்னை சாலிகிராமம் என்ற பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற 51 வயது நபர் தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக பணியாற்றி வரும் நிலையில் அவர் விளையாட்டாக ரம்மி விளையாடுவதை பொழுதுபோக்காக மேற்கொண்டார்.
கடந்த மூன்று வருடங்களில் அவர் சுமார் 15 லட்சத்தை இழந்துள்ளதாகவும், இழந்த பணத்தை எப்படியாவது மீட்க வேண்டும் என்று கடன் வாங்கி விளையாடியதாகவும், அதன் பின்னர் ஒரு கட்டத்தில் கடன் கழுத்தை நெரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
தனது பிள்ளைகளுக்கு இன்று தான் எனது இறுதி நாள் என எஸ்எம்எஸ் அனுப்பிவிட்டு அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாகவும் பதறி அடித்துக் கொண்டு வந்த அவருடைய வாரிசுகள் தூக்கில் சடலமாக தனது தந்தை உடல் தொங்கியதை பார்த்து கதறி அழுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran