வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (13:06 IST)

விபரீதமான விளையாட்டு..! இன்ஸ்டாவில் காதலித்த பெண் தற்கொலை..! தோழி கைது..!!

Sucide
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கி, காதல் வலையில் சிக்க வைக்கப்பட்ட இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மகாராஷ்டிரா மாநிலம் கோரேகானில் 24 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழியை கிண்டல் செய்ய மனிஷ் என்ற பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கினார். இந்த போலி கணக்கு மூலம் தனது பெயர் மனிஷ் என்று கூறி தோழியிடம் பேசி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் மனிஷ் மீது அப்பெண் காதல் வயப்பட்டுள்ளார். 

காதல் ஏற்பட்ட பிறகு அப்பெண் அந்த நபரை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்போது அவளது தோழி 'சிவம் பாட்டீல்' என்ற மற்றொரு போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கி,  நான் தான் மனிஷின் அப்பா என்று கூறி, அவள் காதலித்த மனிஷ் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக  தெரிவித்துள்ளார்.
 
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் ஜூன் 12-ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த பெண்ணின் செல்போனில் உள்ள இன்ஸ்டாகிராம் மெசேஜ்களை பார்த்த அவரது குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, இளம்பெண்ணின் மரணத்திற்கு காரணமான அவரது தோழியை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.