1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 மே 2018 (14:00 IST)

எஸ்.வி.சேகரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? -நீதிமன்றம் காட்டம்

நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட பின்பும், அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என தமிழக போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

 
எஸ்.வி.சேகர் தனது முகநூலில் பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் எஸ்.வி.சேகர் தலைமறைவானார்.  மேலும், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரை கைது செய்ய தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அவரின் முன் ஜாமீன் மனுவை ரத்து செய்தது.
 
அதனையடுத்து எஸ்.வி.சேகரை கைது செய்ய சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருவதாக செய்திகள் வெளியானது. ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. 
 
இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது, அவருக்கு முன் ஜாமீன் வழங்க பல பெண் பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது“எஸ்.வி.சேகரின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பத்திரிக்கையாளர்களை கைது செய்த தமிழக காவல்துறை, ஏன் இன்னும் எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை? சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எஸ்.வி.சேகர் விவகாரத்தில் காவல்துறை பாரபட்சம் காட்டுகிறதா?” என நீதிபதி ராமதிலகம் கேள்வி எழுப்பினார். சட்டத்திற்கு கட்டுப்பட்டே அனைவரும் செயல்பட வேண்டும் எனக்கூறி, தேதி குறிப்பிடாமல் இந்த வழக்கை தள்ளி வைத்தார்.