எல்லா டாஸ்மாக் கடைகளிலும் இதை அமல்படுத்தலாமே…? – உயர்நீதிமன்றம் கேள்வி!
நீலகிரி மாவட்டத்தில் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் செயல்படும் நிலையில் அதை ஏன் தமிழகம் முழுவதும் செய்யக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடைகள் பல செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகளில் மது வாங்கி குடிக்கும் பலர் பாட்டில்களை காட்டு பகுதிகளில் வீசுவதால் வன உயிரினங்கள் பாதிப்படையும் சூழல் உள்ளது.
இதனால் பாட்டில்களை வீசுவதை குறைக்க நடவடிக்கை எடுத்த நீலகிரி மாவட்ட நிர்வாகம், மதுபாட்டில்களை திரும்பவும் டாஸ்மாக் கடைகளிலேயே ஒப்படைத்தால் ரூ.10 பணம் அல்லது வாங்கும் மதுவில் விலை சலுகையாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் இந்த திட்டம் தொடங்கபட்ட நிலையில் மதுபாட்டில்கள் பொதுவெளியில், காட்டுப்பகுதியில் வீசப்படுவது குறைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் நீலகிரியில் செயல்படுத்தப்படும் இந்த மதுபாட்டில்கள் திரும்ப பெரும் திட்டத்தை ஏன் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தக்கூடாது? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.