Last Modified: புதன், 22 பிப்ரவரி 2017 (20:38 IST)
ரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி. தாம்பரம் ரயில் பாதியில் நிறுத்தம்
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரத்துக்கு இன்று மாலை புறப்பட்ட ரயில் ஒன்று, பல்லாவரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த ரயிலை இயக்கிய டிரைவருக்கு, திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடுமையான நெஞ்சு வலியிலும் அவர் பயணிகளின் பாதுகாப்பை முன்னிட்டு ரயிலை உடனடியாக நிறுத்தினார்.
நடுவழியில் திடீரென ரயில் நிறுத்தப்பட்டதும், பயணிகள் பலர் ஒன்றும் புரியாமல் கீழே இறங்கினர். ரயிலில் இருந்த கார்டு, வாக்கி டாக்கி மூலம் டிரைவரை தொடர்பு கொண்ட போது எதிர்ப்பக்கம் பதில் இல்லாததால் உடனடியாக ரயில் இருந்து இறங்கி எஞ்சின் சென்று பார்த்தார்.
அப்போதுதான் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக டிரைவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். உயிர் போகும் அளவுக்கு வந்த நெஞ்சு வலியிலும் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால், நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டது. இதன்பின்னர் மாற்று டிரைவர் மூலம் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.