ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!
கொரோனாவுக்குப் பிறகான காலகட்டத்தில் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாகியுள்ளது. ஆன்லைன் மூலமாகவே டிமேட் கணக்குத் தொடங்கி தங்களுடைய மொபைல் போன்கள் மூலமாக கணக்கை நிர்வகிக்கலாம் என்ற நடைமுறை வந்ததும் பங்குச்சந்தை வர்த்தகத்தில் அதிகமானோர் ஈடுபட காரணமாக அமைந்தது.
இதில் தற்போது அதிகளவில் ஐடி ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பங்குச்சந்தையில் நீண்டகால முதலீடு செய்வது ஒருவகை என்றால், டிரேடிங் எனப்படும் அதிக ரிஸ்க் கொண்ட முதலீடு இன்னொரு வகை. இதை பல பங்குச்சந்தை நிபுணர்கள் எச்சரிக்கையோடு அணுகவேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
இந்நிலையில் சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த வினோத் என்ற 33 வயது இளைஞர் ஆன்லன் டிரேடிங் மூலமாக சுமார் 1 கோடி ரூபாய் வரை நஷ்டமடைந்ததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். எல் ஐ சி ஏஜெண்டாக பணியாற்றிய வினோத், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி டிரேடிங்கில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார். இதனால் கடன் சுமை தாங்காமல் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.