திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: புதன், 18 செப்டம்பர் 2024 (16:24 IST)

குளிர்பானத்தில் மது கலந்துக் கொடுத்து மூதாட்டியிடம் செயின் பறிப்பு: உறவினர் போல நாடகமாடிய கணவன்,மனைவி கைது....

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் உட்கோட்டம் வன்னியம்பட்டி விலக்கு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட இனாம் கரிசல்குளத்தை சேர்ந்தவர் வேலம்மாள் (வயது 74) இவர்  மூதாட்டி வேலம்மாள் வீட்டின் இரும்புபெட்டியில் இருந்து 2 பவுன் தங்கச்செயின் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
 
இதுகுறித்து புகாரின்பேரில் வன்னியம்பட்டி காவல்நிலைய போலீஸார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 
 
போலீஸின் தீவிர விசாரணையில், உறவினரே மூதாட்டி வேலம்மாளிடம் இருந்து நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது‌.
 
இதுதொடர்பாக, தனிப்படை நடத்திய விசாரணையில் உறவினர் என கூறிக்கொண்டு வேலம்மாள் பாட்டியின் வீட்டிற்கு தம்பதி சகிதமாக வந்த சேத்தூர் மேட்டுப்பட்டியை சேர்ந்த பேச்சியம்மாள்(35), அவரின் கணவர் ஜெயக்குமார்(32) ஆகிய இருவரும் சேர்ந்து, குளிர்பானத்தில் மதுவை கலந்துக்கொடுத்து வேலம்மாள் பாட்டியை குடிக்கவைத்து மயக்கமடைய செய்து அவரின் வீட்டில் இரும்புபெட்டியில் இருந்த சுமார் 2 பவுன் தங்க செயினை திருடி சென்றது விசாரணையில் தெரியவந்தது.
 
இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீஸார், தளவாய்புரத்தில் தலைமறைவாக இருந்த பேச்சியம்மாளையும், அவரின் கணவர் ஜெயக்குமாரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 16 கிராம்  தங்கசெயின் பறிமுதல் செய்யப்பட்டது.
 
மேலும் நகையை திருடிய தம்பதியினரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.