வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (09:41 IST)

தஞ்சை வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கமா? – அதிர்ச்சியில் விவசாயிகள்!

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகள் விவசாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கருதப்படுகின்றன. இந்த பகுதிகளில் ரசாயன தொழிற்சாலைகள், எரிவாயு குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட விவசாயத்தை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாத வகையில் கடந்த அதிமுக ஆட்சியில் டெல்டா விவசாய பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் தற்போது அப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பது குறித்து மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெய்வேலியில் நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வரும் நிலையில், நிலக்கரிக்கு பற்றாக்குறை எழுந்துள்ளதால் அப்பகுதியின் அருகில் உள்ள பகுதியில் மக்களிடம் இருந்து நிலங்களை பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நிலக்கரி கிடைக்கும் வேறு சில இடங்களிலும் சுரங்கம் அமைப்பதற்கான முயற்சியில் மத்திய அரசு உள்ளதாகவும், அதில் தஞ்சாவூர் ஒரத்தநாடு தாலுகாவில் உள்ள 11 இடங்களும் பரிந்துரையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் டெல்டா விவசாய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Edit by Prasanth.K