காவிரி விவகாரம்; தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சையிலும், திருவாரூரிலும் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது வரும் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள், மாணவ அமைப்பினர், விவாசாயிகள் என அனைத்து தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகமெங்கும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் விவசாயிகள், சோழன் விரைவு ரயிலை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் திருவாரூரில் விவசாயிகள் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.