பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை வருமா? - உயர் நீதிமன்றத்தில் வழக்கு
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிக்பாஸ் பலரும் விரும்பி பார்க்கும் ஒரு நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது. இதில் பங்கு கொண்டுள்ள காயத்ரி பயன்படுத்திய ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து மக்கள் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி ஆகியவை இதைக் கண்டித்தன. மேலும், நாம் தமிழகம் கிருஷ்ணசாமி, இந்த நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கும் தொடர்ந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக, ஆரவ்விடம் காதல் வசப்பட்டிருக்கும் ஓவியா பற்றிய காட்சிகளே அதிகம் இடம் பெற்றிருந்தது. ஆரவை கையால் தொடுவது, அவரை மிக நெருக்கமாக நெருங்குவது, அவருக்கு முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்வது என்பது போன்ற காட்சிகள் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என சரவணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் ஆபாசமாக உடையணிந்து வருவதாகவும், குடும்பத்தோடு அமர்ந்து பார்க்க முடியாத அளவிற்கு ஆபாசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடித்தட்டு மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது எனவும், சமூகத்திற்கு கேடுகளை விளைவிக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.