‘என்ன செய்தும் உடல் எடையை குறைக்க முடியல’ – விரக்தியில் மருத்துவ மாணவி தற்கொலை!
உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றதால் விரக்தியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலங்களில் உடல் பருமன் பிரச்சினை பல இளைஞர்களுக்கும் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. உடல் பருமன் ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், வரன் கிடைப்பது போன்றவற்றிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிப்பதால் பலரும் மனவிரக்திக்கு உள்ளாகின்றனர்.
கர்நாடக மாநிலம் மங்களூர் டவுன் குந்திகான் பகுதியில் உள்ள ஏ.ஜே.மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் 2ம் ஆண்டு படித்து வந்தவர் 20 வயதான பிரக்ருதி ஷெட்டி. இவரது பெற்றோரும் மருத்துவர்கள்தான். மருத்துவ கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த ப்ரக்ருதி சமீப காலத்தில் உடல் பருமன் அதிகரித்துள்ளார். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவரால் உடல் பருமனை குறைக்க இயலவில்லை என கூறப்படுகிறது.
இதனால் விரக்தி அடைந்த அவர் விடுதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலைக்கு முன்னர் எழுதிய உருக்கமான கடிதமும் கிடைத்துள்ளது. அதில் தனது உடல் எடை அதிகரிப்பது குறித்து அவர் விரக்தியில் இருந்ததும், அதனால் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K