1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2016 (16:46 IST)

கைப்பற்றப்பட்ட படகுகளை திருப்பி ஒப்படைக்க முடியாது - இலங்கை அமைச்சர்

இறுதி விசாரணை முடியும் வரையில் அவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட படகுகளை திருப்பி ஒப்படைக்க முடியாது என்று இலங்கை இணை அமைச்சர் அமீர் அலி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமீர் அலி, ”இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி, எங்கள் கடல் எல்லைக்குள் வந்து மீன் பிடிப்பவர்களை எங்களது கடற்படை கைது செய்து எங்கள் நாட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கிறது. எங்கள் சட்டவிதிகளின்படி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும்.
 
வழக்கு முடிவடைவதற்கு பல மாதங்கள், ஆண்டுகள் கூட ஆகலாம். மனிதாபிமான அடிப்படையில் மீனவர்களை மட்டும் முதலில் விடுவித்து இந்தியாவுக்கு அனுப்பி விடுகிறோம். ஆனால் இறுதி விசாரணை முடியும் வரையில் அவர்களிடம் இருந்து கைப்பற்றப் பட்ட படகுகளை திருப்பி ஒப்படைக்க முடியாது.
 
இறுதி விசாரணை முடிவடைந்த பின்னர், நீதிமன்றம் படகுகளை திருப்பி ஒப்படைக்கலாம் என்று உத்தரவிட்டால் மட்டுமே, திருப்பி ஒப்படைக்க முடியும்.
 
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலரை சுற்றுலா பயணிகளாக அழைத்து வந்து அவர்களது உடல் உறுப்புகளை எடுப்பதாக ஒரு சில புகார்கள் வந்ததன் அடிப்படையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
மேலும் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் எதுவும் கூற இயலாது. இலங்கையில் கடந்த ஆட்சியை விட தற்போதைய ஆட்சி நல்ல முறையில் நடந்து வருகிறது. இலங்கையில் வாழும் தமிழர்கள் இப்போது நிம்மதியான வாழ்க்கை நடத்துகின்றனர்.
 
அவர்களுக்கு தற்போது பெரிய அளவில் பிரச்சனைகள் இல்லை. அவர்களுடைய எல்லா பிரச்சனைகளையும் முழுமையாக தீர்த்து, முழு அதிகாரத்துடனும் சம உரிமையுடனும் வாழ்க்கை நடத்த புதிய அரசு எல்லா நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது” என்று கூறியுள்ளார்.