செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 20 டிசம்பர் 2024 (07:38 IST)

6 ஆண்டுகளுக்கு பின் பேருந்து கட்டணம் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

புதுச்சேரியில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளதை அடுத்து அம்மாநில பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி அரசின் சில அறிவிப்புகள் அம்மாநில மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு சாலை போக்குவரத்து கழகம் பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ் நாதன் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

இதனை அடுத்து, குறைந்தபட்சம் இரண்டு ரூபாயிலிருந்து அதிகபட்சம் எட்டு ரூபாய் வரை பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஏ.சி வசதி இல்லாத பேருந்துகளில், குறைந்தபட்ச கட்டணம் ஐந்து ரூபாயிலிருந்து ஏழு ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. ஏ.சி டவுன் பஸ்களில், குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 13 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டீலக்ஸ் பேருந்துகளில் 12 ரூபாயிலிருந்து குறைந்தபட்ச கட்டணம் தற்போது 16 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் அதிகபட்ச கட்டணம் 47 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வால், புதுவை மற்றும் கடலூர் இடையே பேருந்து பயணத்துக்கு இனி 25 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த கட்டண உயர்வு புதுச்சேரி மக்களின் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Edited by Siva