தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்டம் இன்று முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த பின் கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம். கடந்த ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் முதலில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்டு பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் செயல்பாட்டிற்கு வந்தது. தொடர்ந்து இந்த திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி அரசு உதவிபெறும் பள்ளியில் இன்று காலை மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டு இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு தினம்தோறும் இட்லி, பொங்கல், சப்பாத்தி, கிச்சடி போன்ற சிற்றுண்டிகள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 18.50 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் நிலையில், கூடுதலாக 2.20 லட்சம் மாணவர்களும் பயன்பெற உள்ளனர்.
Edit by Prasanth.K