ஓடும் ஆம்னி பேருந்தில் டிரைவருக்கு மாரடைப்பு.. 40 உயிர்களை காப்பாற்றி விட்டு பலி..!
விராலிமலை அருகே அருகே ஆம்னி பேருந்து போட்டி கொண்டிருந்தது. டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, அவர் பேருந்தை ஓரமாக நிறுத்தி, அந்த பேருந்தில் பயணம் செய்த 40 பேரையும் காப்பாற்றிவிட்டு பரிதாபமாக பலியானார்.
திருநெல்வேலியில் இருந்து சென்னை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து நேற்று நள்ளிரவு 11 மணிக்கு கிளம்பியது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பேருந்தை ஓட்டிய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதனை அடுத்து, அவர் நெஞ்சை, கைகளை பிடித்தபடி, இன்னொரு கையால் சாமர்த்தியமாக சாலையின் வலது புறத்தில் உள்ள தடுப்பின் மீது ஏற்றி, விபத்து ஏற்படாமல் பயணிகளை காப்பாற்றினார். ஆனால், அதே நேரத்தில் சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தார்.
விபத்தில் இருந்து காப்பாற்றிய டிரைவரின் செயலை கண்டு பயணிகள் மகிழ்ச்சியடைவதா? அல்லது அவரின் மரணத்தைக் கண்டு அதிர்ச்சியடைவதா? என பயணிகள் தவித்தனர். நள்ளிரவில் நடுரோட்டில் தனித்திருந்த பயணிகளுக்கு, தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உதவி செய்தனர். பின்னர், பயணிகளை வேறு ஒரு பேருந்தில் அழைத்து சென்றனர்.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், பயணிகளை காப்பாற்றிய பின்னர் உயிரிழந்த டிரைவருக்கு பயணிகள் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran