வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 4 ஜனவரி 2023 (13:04 IST)

காயத்ரி ரகுராம் போனதால எந்த வருத்தமும் இல்ல! – பாஜக அண்ணாமலை கருத்து!

தமிழ்நாடு பாஜகவிலிருந்து நடிகை காயத்ரி ரகுராம் விலகிய நிலையில் அதுகுறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாஜக பிரமுகர் திருச்சி சூர்யாவுக்கும், பாஜக சிறுபான்மை அணியை சேர்ந்த டெய்சி என்பவருக்கும் இடையே நடந்த செல்போன் உரையாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தொடர் பதிவுகளை பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராம் பதிவிட்டு வந்தார். இதுதொடர்பாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் காயத்ரி ரகுராம் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென கூறி கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அண்ணாமலையின் நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

காயத்ரி ரகுராம் விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை “பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகியதால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. கட்சியிலிருந்து யார் விலகினாலும் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதுதான் என்னுடைய வாடிக்கை

மகளிர் அதிகளவில் பாஜகவை நோக்கி வருகிறார்கள். யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என கட்சியை விட்டு போகிறார்கள் என்றால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது” என பேசியுள்ளார்.

Edit By Prasanth.K