1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (13:54 IST)

மாநில அரசின் நிதி ஆதாரத்தை பறிக்கிறது பாஜக.! முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு.!!

Stalin Speech
மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்களை சமமாக நடத்துவதில்லை என்றும் மாநில அரசின் நிதி ஆதாரத்தை பறிக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். 
 
தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற விழாவில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற 993 திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும், ரூ.560 கோடி மதிப்பீட்டில் 75 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 
 
இதன் பின்னர் விழாவில்  பேசிய, இந்த நிகழ்ச்சி கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 3 மாவட்டங்களுக்கான முத்தான விழா ஆகும். அவ்வையாருக்கு நெல்லிக்கனி தந்து அதியமான் ஆட்சி செய்த பூமி தர்மபுரி. தமிழ் வளர வேண்டும் என்பதால் அவ்வையாருக்கு நெல்லிக்கனி கொடுத்தவர் அதியமான். தர்மபுரி என்றதும் நினைவுக்கு வருவது ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தான் தருமபுரி மக்களுக்கு நல்ல குடிநீர் கிடைக்க காரணமானவன் நான் என்ற மகிழ்ச்சியில் இங்கு நிற்கிறேன் என்று தெரிவித்தார்.
 
உள்ளாட்ச்சி துறை அமைச்சராக இருந்தபோது ஒக்கேனக்கல் குடிநீர் திட்டத்தை அறிவித்தேன். பெண்களுக்குச் சொத்துரிமை பெற்று தந்தவர் கருணாநிதி. திராவிட மாடல் அரசு வகுத்த திட்டங்கள் குறித்து நாள் முழுவதும் பேசலாம். மக்களுக்கான திட்டங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறோம் என்று முதல்வர் கூறினார்.
 
தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடிமகனும் பயன்பெறும் வகையில் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாம் என்றும் தமிழ்நாட்டில் ஒக்கேனக்கல் குடிநீர் திட்டத்தை முடக்கியது அதிமுக என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
 
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களைக் கொடுத்து வருகிறது. பேருந்து வசதி இல்லாத 8 மலைக்கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி செய்து கொடுத்துள்ளோம். 2 ஆம் கட்ட ஒக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
 
சேலம் மாவட்டத்தில் மினி டைடல் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். தர்மபுரி மாவட்டத்தில் 5 சமுதாய நலக்கூடம் அமைக்கப்படும். வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது.  

தேன்கனிக்கோட்டை பகுதியில் யானை தாக்குதலிலிருந்து பாதுகாக்க ரூ. 10 கோடியில் எக்கு வேலி அமைக்கப்படும். சேலத்தில் 164 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சாலை திட்டப்பணிகள் நிறைவேற்றப்படும். எப்பொழுதும் மக்களுக்காகவே செயல்படும் அரசு திராவிட மாடல் அரசு என்று அவர் கூறினார். 
 
CM Programe
மாநில அரசின் நிதி ஆதாரம் பறிப்பு:
 
மத்திய பா.ஜ.க. அரசு மாநிலங்கலை சமமாக நடத்துவதில்லை என்றும் மாநில அரசின் நிதி ஆதாரத்தை மத்திய அரசு பறிக்கிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். 
 
மாநில அரசின் ஆக்சிஜனான வரி வருவாயை மத்திய அரசு நிறுத்த முயற்சிக்கிறது என்றும் பிரதமரின் சுற்றுப்பயணத்தை வெற்றுப்பயணமாகத்தான் தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
 
தேர்தலுக்காகவே சிலிண்டர் விலை குறைப்பு:
 
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 500 ரூபாய் ஏற்றிவிட்டு தேர்தல் வருவதால் 100 ரூபாய் குறைத்துள்ளனர் என்று குறிப்பிட்ட முதல்வர்,  தேர்தல் காரணமாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியென நாடகமாடுகிறார்கள் எனவும் விமர்சித்துள்ளார்.

 
மத்திய அரசுக்கு வருவாய் என்பது மாநில அரசு கொடுப்பது தான் என்றும் தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள் மீது பிரதமருக்குப் பாசம் வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.