வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (11:57 IST)

ஊரடங்கிலும் அபின் கடத்திய கும்பல்; பாஜக நிர்வாகி உள்ளிட்ட 5 பேர் கைது!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் திருச்சியில் அபின் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக மாவட்டங்களிடையே பயணிக்க இ-பாஸ் நடைமுறை அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சியில் சிலர் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். வாகன சோதனையின்போது பெரம்பலூரிலிருந்து திருச்சி வந்த அடைக்கலராஜ் மற்றும் அவரது நண்பரான ஆதடையான் இருவர் வந்த காரையும் சோதனை செய்துள்ளனர்.

அப்போது காரில் அபின் போதைப்பொருள் 2 கிலோ அளவில் கடத்தப்பட்டதை கண்டறிந்த போலீஸார் அதை கைப்பற்றியுள்ளனர். iதன் மதிப்பு 10 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜஸ்தானிலிருந்து அபின் கடத்தப்பட்டு இவர்களை கைக்கு வந்துள்ளதும், தொடர்ந்து அதை வேறொருவருக்கு கை மாற்ற திருச்சி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் மூவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் கைது செய்யப்பட்ட அடைக்கலராஜ் பெரம்பலூர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.