செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (16:57 IST)

தமிழகத்தில் தனித்துப் போட்டியிடத் தயார் – தமிழிசை சீரியஸ் காமெடி…

தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்துப் போட்டியத் தயார் என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தாமரையை மலரவைக்க தமிழக பாஜக் தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரைக் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆனால் தாமரை மலர்வதற்கான எந்த அறிகுறியும் இதுவரைத் தெரியவில்லை. இந்நிலையில் தனது பலத்தைத் தமிழகத்தில் அதிகரிக்க கூட்டணி எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது.

தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியாக இருந்தாலும் அவர்களை ஆட்டி வைத்துக்கொண்டிருப்பது என்னவோ பாஜகதான் என்பது தமிழ்நாடறிந்த உண்மை. அதனால் அதிமுக, பாமக, தேமுதிக ஆகியக் கட்சிகளைக் கொண்ட கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கென்று சில எம்.பி.களை தமிழகத்தில் உருவாக்கிக்கொள்ள பாஜக முயன்று வருகிறது. ஆனாலும் பாஜகவின் பலம் தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பே இல்லை என்ற நிலையே நிலவி வருகிறது.

தேர்தலில் கூட்டணி மற்றும் தனித்துப்போட்டியிடும் திட்டம் குறித்த கேள்விகளுக்கு இன்று மதுரையில் பதில் அளித்துள்ள தமிழகப் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன். ’தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார். திமுக- காங்கிரஸ் ஆகியக் கட்சிகள் இல்லாதக் கட்சிகளோடு கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். பிரதமர் மோடியின் தமிழக வருகை தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. கருப்புக்கொடி காட்டுபவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லை. வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டுமென்றுதான் கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் ‘ எனத் தெரிவித்துள்ளார்.