மன வலிமை இல்லாம சாகத்தான் செய்றாங்க... சூர்யாவுக்கு பதிலடி கொடுத்தாரா அண்ணாமலை?
சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை சூர்யாவின் அறிக்கை குறித்து விமர்சனம் செய்துள்ளதாக ட்விட் ஒன்று வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நேற்று நடைபெற்று முடிந்தது. முன்னதாக நீட் தேர்வு குறித்த பயத்தால் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நடிகர் சூர்யா நீட் தேர்வை விமர்சித்து காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதற்கு பாஜகவினரும், நீட் தேர்வுக்கு ஆதரவாக பேசுவோரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் சூர்யாவுக்கு ஆதரவாகவும் குரல்கள் எழுந்து வருகின்றன. இதுகுறித்து சூர்யா ரசிகர்களும், நீட் தேர்வை ரத்து செய்ய குரல் கொடுப்போரும் #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த அண்ணாமலை சூர்யாவின் அறிக்கை குறித்து, 12th பெயில் ஆகிட்டோம்னு வருடா வருடம் சில மனவலிமை குறைந்த மாணவர்கள் சாகுறாங்க. அப்போது எதுக்கு 12th வச்சிருக்கீங்க? அது போல தான் நீட் தேர்வும். இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்களுக்கு கிடைக்க கூடிய மருத்துவ படிப்பை பெறுவதற்கான வாய்ப்பாக இதை பாருங்கள் என அவர் பதிவிட்டதாக ஒரு ட்விட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனால், இதனை தான் பதிவிடவில்லை இந்த டிவிட்டர் கணக்கு என்னுடையதல்ல என அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஊடகங்கள் செய்தியை வெளியிடும் முன் சரிபார்த்து வெளியிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.