வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 2 ஜூன் 2024 (16:29 IST)

தமிழ்நாட்டில் பல இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும்..! ஜி.கே வாசன் நம்பிக்கை..!!

GK Vasan
கணிப்புகளைவிட இந்திய அளவில் அதிக இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  மக்களவைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளைவிட  தமிழகத்திலும் பல இடங்களில் பாஜக கூட்டணி வெல்லும் என்றார். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்று நல்லரசாக உள்ள இந்தியாவை வல்லரசாக மாற்றுவார் என்று அவர் தெரிவித்தார்.

பதவிகளுக்கு அப்பாற்பட்டு நாட்டின் நலன் கருதி பாஜக கூட்டணியில் தமாகா தொடர்ந்து நீடிக்கும் என்றும் ஒரு கட்சியின் வெற்றி, தோல்விகளை மக்கள் தான் தீர்மானிப்பர் என்றும் ஜி கே வாசன் கூறினார். அதிமுக பற்றி அண்ணாமலை பேசுவதில் தவறில்லை என தெரிவித்த அவர்,  தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார். 

 
மக்கள் மீது சுமையை சுமத்தியுள்ளதை யாராலும் மறக்க முடியாது என்றும்  2026-ம் ஆண்டு தமிழக சட்டபேரவைத் தேர்தலில் பாஜக தலைமையில் அதிக கட்சிகளுடன் கூட்டணி அமையும் என்றும் ஜி.கே வாசன் குறிப்பிட்டார்.