பாஜக தலைமையில் மூன்றாவது அணி.. எந்தெந்த கட்சிகள் இணையலாம்?
பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகிவிட்ட நிலையில் தற்போது பாஜக தலைமையில் புதிய கூட்டணி உருவாக இருப்பதாகவும் அது அதிமுக, திமுக கூட்டணிக்கு மாற்றாக மூன்றாவது கூட்டணியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் ஏற்கனவே திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி என இரண்டு வலுவான கூட்டணிகள் உள்ளன. அதுமட்டுமின்றி சீமான் தனித்து போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாஜக தலைமையில் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணி, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ,பாரிவேந்தரின் ஐக்கிய ஜனதா கட்சி , பிரேமலதா விஜயகாந்த்தின் தேமுதிக, டாக்டர் ராமதாஸின் பாமக, ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், ஜான் பாண்டியன் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைய இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிப்படையாகவே பேச்சு வார்த்தை நடத்தும் என்று கூறப்படுகிறது.
பாஜக தலைமையில் இணையும் கூட்டணி கட்சிகளுக்கு தலா ஒரு மத்திய இணை அமைச்சர் பதவி தரப்படும் என்ற ரீதியில் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுவதால் இந்த கூட்டணியில் அதிக கட்சிகள் இணைய வாய்ப்பு இருக்கிறது.
Edited by Mahendran