பிக் பாஸ் செட் அமைக்கும் போது ஏற்பட்ட விபத்து: வடமாநில தொழிலாளி காயம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான செட் அமைக்கும் பணியில் இருந்த வடமாநில தொழிலாளி 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்ததால் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூந்தமல்லி அருகே தனியார் பிலிம் சிட்டியில் பிக் பாஸ் உள்பட பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிக் பாஸ் எட்டாவது சீசன் அக்டோபர் ஆறாம் தேதி தொடங்க இருக்கிறது.
அந்த வீட்டின் உள் பகுதியில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி சாயின் கான் என்பவர் திடீரென இருபது அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதனை அடுத்து பலத்த காயமடைந்த அவர், சக தொழிலாளிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். காயம் அடைந்த சாயின்கான், தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
Edited by Mahendran