புதன், 12 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 பிப்ரவரி 2025 (07:08 IST)

ஆன்லைன் பண மோசடி இழப்புக்கு வங்கி நிர்வாகமே பொறுப்பு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ஆன்லைன் மூலம் பண மோசடி நடந்தால், அந்த இழப்புக்கு வங்கி நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த மதுமிதா என்பவர் நுகர்வோர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023 ஆம் ஆண்டு தனது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்ததாகவும், மறுமுனையில் பேசிய நபர் மும்பை சைபர் கிரைம் போலீசில் இருந்து பேசுவதாகவும், நான் அனுப்பிய பார்சலில் போதைப் பொருள் இருப்பதாக தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

எனது ஆதார் அட்டை மூலம் பல்வேறு வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம்தான் சட்டவிரோத பரிவர்த்தனை நடந்துள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்ததாக கூறியுள்ளார். பின்னர், என்னுடைய வங்கி கணக்கில் இருந்து  பணத்தை வேறொரு வங்கிக்கு அவர்கள் மாற்றினார்கள் என்றும், அந்த பணம் திரும்ப அனுப்பப்படும் என்று தெரிவித்த நிலையில், செல்போன் துண்டிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி கும்பல் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது, நான் தனிநபர் கடன் கேட்பது போன்று மோசடி கும்பல் வங்கிக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளது என்றும், ஆனால் வங்கி நிர்வாகம் என்னிடம் எந்த விதமான உறுதியும் செய்யாமல் 15 லட்சம் ரூபாயை கணக்கில் வரவு வைத்ததும், அந்த பணத்தையும் மோசடி கும்பல் அபகரித்ததும் தெரிய வந்தது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, எனது வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் பறித்த பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், மோசடி கும்பலின் வங்கி கணக்கு விவரம் தெரிந்த போதும் பணத்தை திரும்ப பெறுவதற்கு வங்கி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே மோசடி கும்பல் அபகரித்த பணத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்றும், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கும் சேர்த்து மொத்தமாக பணம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Siva