1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (16:32 IST)

பம்பரம் சின்னம் கோரிய வழக்கு.! தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு.!!

Vaiko
பம்பரம் சின்னத்தை ஒதுக்க கோரிய மதிமுகவின் மனு மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சென்னை உயர் நீதிமன்றத்தில், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தாக்கல் செய்த மனுவில், கடந்த 1996-ம் ஆண்டு முதல் சட்டமன்றம் மக்களவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் மதிமுக போட்டியிட்டுள்ளது. 
 
இந்தத் தேர்தல்களில் தங்கள் கட்சிக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாக கூறி, தங்கள் கட்சியின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.
 
அதன்பின் கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன்தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
 
பம்பரம் சின்னம் பொது சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்தக் கட்சியும் அந்த சின்னத்தை கோரவில்லை என்பதாலும், தங்கள் மனுவை பரிசீலித்து, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தார்.
 
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பம்பரம் சின்னத்தை ஒதுக்க கோரிய மதிமுகவின் மனு மீது இரண்டு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தனர். 


பிப்ரவரி 28-ல் மதிமுக அளித்த புதிய மனு மீது உரிய முறையில் பரிசளித்து முடிவெடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.