1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2018 (10:50 IST)

சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த துணை வேந்தர் - அதிர்ச்சி செய்தி

பாரதியார் பல்கலைக்கழக பணி நியமனத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள துணை வேந்தர் கணபதி, சசிகலாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
பணி நியமனங்களில் லஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதியும், அவருக்கு உடைந்தாக இருந்த  வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது, சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். 80 பேரை பணி நியமனம் செய்ததில் சுமார் ரூ.80 கோடி வரை லஞ்சம் பணம் கை மாறியதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள கணபதி, சசிகலாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார் என்பது தெரியவந்துள்ளது. 2016ம் ஆண்டு, மறைந்த ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதான் கணபதி துணை வேந்தராக நியமிக்கப்பட்டார். சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த ஒரே காரணத்தினால், பல்கலைக்கழக மானியக்குழுவின் விதிகளை மீறி கணபதிக்கு பதவி கொடுக்கப்பட்டது என அப்போதே புகார் எழுந்தது.

 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலாவை முதல்வராகுமாறு சில துணை வேந்தர்கள் அவரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். அவர்களை கணபதிதான் ஒருங்கிணைத்து அழைத்து சென்றார் எனக் கூறப்படுகிறது. தற்போது முதல்வர் மாறிவிட்டாலும், அமைச்சர்கள், செயலாளர் ஆகியோரின் சிபாரிசுகளை ஏற்காமல் கணபதி தன்னிச்சையாக செயல்பட்டார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.