என்ன ஆனது அரிச்சந்திர மயான திட்டம் ?– ஆஃப் ஆன அய்யாக்கண்ணு !

Last Modified செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (09:50 IST)
அய்யாக்கண்ணு தலைமையில் 111 விவசாயிகள் காசியில் நடத்த இருப்பதாகக் கூறப்பட்ட பிச்சை எடுக்கும் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம், விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளுடன் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யக்கண்ணு தலைமையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்போது டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடைப்பெற்று வந்தது.
 
பிரதமரை தங்களை சந்திக்க வேண்டும் எனவும் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அரை நிர்வாண போராட்டம், மொட்டையடிக்கும் போராட்டம், எலிக்கறி உண்ணும் போராட்டம் எனப் பலவிதமான போராட்டங்களைப் பல நாட்கள் டெல்லியில் நடத்தினார். ஆனாலும் மோடி அவர்களை சந்திக்கவில்லை. அது கடுமையான விமர்சனங்களை உருவாக்கியது. அதையடுத்து மோடி மக்களவைத் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவருக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த 111 விவசாயிகள் மனுத்தாக்கல் செய்வோம் என அய்யாக்கண்ணு அறிவித்திருந்தார்.
 
இதையடுத்து மோடி வாரனாசி தொகுதியில் போட்டியிடுவதால் அதே தொகுதியில் தமிழக விவசாயிகளும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. 111 வேட்பாளர்களுக்கான வேட்புமனுத்தாக்கலுக்கான பணமும் காசியில் இருக்கும் அரிச்சந்திர மயானத்தில் பிச்சையெடுத்து கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் அய்யாக்கண்ணு டெல்லி சென்று பாஜக தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மோடிக்கு எதிராக போட்டியிடும் முடிவில் இருந்து பின்வாங்கி இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதனால் அரிச்சந்திர மயானத்தில் பிச்சை எடுக்கும் திட்டமும் கைவிடப்பட்டுள்ளது. அய்யாக்கண்ணூ தேர்தலுக்குப் பின் பாஜகவில் இணைய இருப்பதாகவும் ஒரு செய்தி உலாவந்து கொண்டிருக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :