அத்திக்கடவு – அவிநாசி திட்டம்; இன்று முதல் வெள்ளோட்டம்! – மகிழ்ச்சியில் மக்கள்!
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று நடத்தப்பட்டது.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதி மக்களின் விவசாயம் மற்றும் குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்ய அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் இந்த திட்டம் எப்போது முடியும், தண்ணீர் பாசனம் கிடைக்கும் என மக்கள் ஆர்வமாய் காத்திருக்கின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கி ரூ.1,657 மதிப்பில் நடந்து வரும் இந்த திட்டத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இந்நிலையில் பவானி காலிங்கராயன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிரேற்று நிலையத்தில் மோட்டார் மூலம் நீரை இறைத்து முதல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நீரேற்று நிலையங்களிலும் வெள்ளோட்டம் பார்க்கப்பட உள்ளது. வெள்ளோட்டத்தில் குழாய்களில் தண்ணீர் கசிவு உள்ளிட்டவை ஏற்படுகிறதா என சரிபார்த்து பிரச்சினைகள் இருந்தால் சரிசெய்யப்பட உள்ளது.
வெள்ளோட்ட பணிகள் முடிந்து சில மாதங்களில் நீர் திறப்பு தொடங்கும் என தெரிகிறது. வெள்ளோட்டம் தொடங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
Edit by Prasanth.K