ஆருத்ரா வழக்கு: திருவள்ளூர் கிளை இயக்குனரின் ஜாமின் மனு தள்ளுபடி
ஆருத்ரா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் கிளை இயக்குனர் சசிகுமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆருத்ரா மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜசேகரை துபாயில் இருந்து இந்தியா அழைத்து வந்து விசாரணை நடத்த உள்ளோம் என இன்றைய விசாரணையின்போது சிபிசிஐடி தரப்பு வாதம் செய்தது.
இந்நிலையில் சிபிசிஐடி குற்றம் சாட்டுவது போல் தான் திருவள்ளூர் கிளை இயக்குனர் இல்லை, நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பு வாதம் செய்த நிலையில் அவரது வாதத்தை நீதிபதி ஏற்காமல் அவரது ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
முன்னதாக ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம் மூலம், முதலீட்டாளர்களிடம் ரூ.2,500 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர் அவரது மனைவி உஷா, தலைமறைவாகி துபாயில் வசித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.
மோசடி பணத்தை, துபாயில் சுமார் ரூ.300 கோடி வரை ஆருத்ரா ராஜசேகர் முதலீடு செய்திருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் துபாயில் பதுங்கி இருக்கும் நிறுவன இயக்குனரை பிடிக்க தமிழக காவல்துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran