திருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!
திருவண்ணாமலையில் நடைபெற இருக்கும் மகா தீபத்தின் போது, பக்தர்கள் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி, 17 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவின் போது வரக்கூடிய பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 10-ஆம் தேதி தேரோட்டம், டிசம்பர் 13-ஆம் தேதி பரணி தீபமும் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத் திருவிழாவிற்கு சுமார் 35 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் அனைவருக்கும் போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்தல் குறித்த ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், கோயில் உள்ளே பரணி தீபத்தை பார்க்க 7,500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்; அதேபோல், மகா தீபத்திற்கு 11,500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை உச்சியில் உள்ள மகாதீபத்தை தரிசிக்க 2,000 பக்தர்களுக்கு மட்டுமே மலையேற அனுமதிக்கப்படும் என்றும் அனுமதி சீட்டுகள் மற்றும் உடல் தகுதியின் அடிப்படையில் பக்தர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், கோயிலின் உள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்; மூன்று மருத்துவ முகாம்களும் அமைக்கப்படும். மொத்தம் 85 மருத்துவ குழுக்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva