திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (13:02 IST)

நந்தன் படம் காலத்துக்கும் மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும்… ஓடிடி ரிலீஸில் பார்த்து பாராட்டிய அண்ணாமலை!

சசிகுமார், பாலாஜி சக்திவேல் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பில் இரா சரவணன் இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீஸான திரைப்படம் ‘நந்தன்’. ரிலீஸுக்கு முன்பே இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சக சினிமா கலைஞர்கள் மற்றும் சீமான் உள்ளிட்ட அரசியல்வாதிகள் படத்தைப் பார்த்து பாராட்டிப் பேசியிருந்தனர். படம் பாராட்டுகளைப் பெற்றாலும் பெரிய அளவில் ரசிகர்களை திரையரங்குக்குள் ஈர்க்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஓடிடியில் ரிலீஸான பின்னர் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த படத்தைப் பார்த்து பாராட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ”நந்தன் திரைப்படத்தைப் பார்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்திற்காகப் பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சர்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இத்திரைப்படம்.   தனது தேர்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சி மன்ற தலைவர்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த சகோதரர் சசிகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். பல ஆழமான கருத்துக்கள் நிறைந்த 'நந்தன்' திரைப்படம் காலத்திற்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.” எனப் பாராட்டியுள்ளார்.