திங்கள், 24 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 மார்ச் 2025 (10:59 IST)

புதுவையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றம்..!

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், திமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
 
புதுச்சேரியில் சட்டப்பேரவையின் 10வது நாள் கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. அப்போது, திமுக எம்எல்ஏ சிவா, பொதுப்பணித் துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.
 
ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சிவா உட்பட திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டு, அமைச்சரின் பதவி விலகலுக்காக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, பெரும் குழப்பம் ஏற்பட்டதால், அவைக்குள் ஏற்பட்ட அமளியை கட்டுப்படுத்த, அவைக் காவலர்களுக்கு உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.
 
இதனையடுத்து, அவைக் காவலர்கள் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களை கட்டாயமாக வெளியேற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவை வளாகத்தின் வெளியே திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Edited by Mahendran