1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 11 மார்ச் 2022 (15:37 IST)

எல்லை தெரியாமல் கடந்த மீனவர்கள்: அன்புமணி மத்திய அரசுக்கு கோரிக்கை!

செ‌ஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை. 

 
தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்பதும் அது மட்டுமன்றி தமிழக மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு அந்த படகுகள் இலங்கை அரசால் ஏலம் விடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவர் குறிப்பிட்டுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், பூத்துறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீன் பிடிக்கச்சென்ற 16 தமிழக மீனவர்கள், 9 வட இந்திய மீனவர்கள் என 25 பேர் எல்லைதாண்டி மீன் பிடித்ததாக செ‌ஷல்ஸ் நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
தமிழக மீனவர்களின் இரு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்திலிருந்து கொச்சி துறைமுகம் வழியாக மீன்பிடிக்கச் சென்ற மேலும் 33 மீனவர்கள் கடந்த 7 ஆம் தேதி செ‌ஷல்ஸ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல், இந்தோனேஷிய எல்லைக்குள் நுழைந்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
தமிழக மீனவர்களின் நோக்கம் எல்லைதாண்டி மீன் பிடிப்பதோ, சட்டவிரோத செயல்களை செய்வதோ அல்ல. வாழ்வாதாரம் ஈட்டுவதற்காக சென்ற அவர்கள் எல்லை தெரியாமல் தான் அடுத்த நாட்டு எல்லைக்குள் சென்று விட்டனர். இதை கருத்தில் கொண்டு அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.