தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். வரும் 9-ம் தேதி தொடங்கவிருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவிலேயே முதன்முறையாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடித்ததுடன், அதன் விவரங்களையும் வெளியிட்டிருக்கிறது பிஹார் மாநில அரசு. இதன்மூலம் சமூகநீதியைக் காப்பதில் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமையை பிஹார் அரசு வென்றெடுத்திருக்கிறது. இதற்குக் காரணமான பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கும் பாமக சார்பில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகநீதியைக் காக்கும் விஷயத்தில் தமிழகத்துக்கும், பிஹாருக்கும் இடையே எப்போதும் மறைமுகமான போட்டி நடந்து கொண்டே தான் இருக்கிறது. மாநிலங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான முதலாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை, 1951-ம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் மூலம் சாத்தியமாக்கியது தமிழகம் என்றால், தேசிய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதற்கான மண்டல் ஆணையம் அமைக்கப்படுவதை 1978-ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் பிஹார் மாநிலத்துக்குள் நுழைய முடியாத அளவுக்கு மிகக் கடுமையான போராட்டங்களை நடத்தி சாத்தியமாக்கியது பிஹார் மாநிலம் தான். சமூகநீதியைக் காப்பதில் தமிழகம் தடுமாறிக் கொண்டிக்கும் நிலையில், சமூகநீதியைக் காப்பதில் பிஹார் மாநிலம் மீண்டும் சாதித்திருக்கிறது.
பிஹார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் அம்மாநிலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 27.10%, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 36%, பட்டியலினத்தவர் 19.7%, பழங்குடியினர் 1.70%, இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பினர் 15.50% இருப்பதும், சாதிகளைப் பொருத்தவரை யாதவர் சமுதாயம் 14.26% மக்கள்தொகையுடன் தனிப்பெரும் சாதியாக இருப்பதும் தெரியவந்திருக்கிறது. இது குறித்து விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி விவாதிக்க இருக்கும் பிஹார் மாநில அரசு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிப்பது குறித்தும் தீர்மானித்து செயல்படுத்தவுள்ளது. பிஹார் அரசின் இந்த முயற்சியும் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிஹாருக்கு முன்பே கர்நாடகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட போதிலும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. மாறாக, பிஹார் அரசு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதன் முடிவுகளையும் வெளியிட்டிருக்கிறது. அதன் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பல்வேறு மாயைகள் நொறுக்கப்பட்டிருக்கின்றன.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை; மத்திய அரசுக்கு மட்டும் தான் அந்த அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டு வந்தது; மத்திய அரசும் அதே நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், மாநில அரசுக்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் உண்டு என்பதை பிஹார் உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அதன்மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். இதை பயன்படுத்திக் கொண்டு தமிழக அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
உண்மையில் கர்நாடகமும், பிஹாரும் நடத்துவதற்கு முன்பாகவே தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். அதற்கான தேவையும், கோரிக்கைகளும் தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கின்றன. 44 ஆண்டுகளுக்கு முன்பு 1980-ம் ஆண்டு ஜூலை 20-ம் நாள் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட போது, அதில் நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதனடிப்படையில் ஒவ்வொரு சமூகத்துக்கும் அதன் மக்கள்தொகைக்கு ஏற்ற வகையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது தான். ஆனால், அப்போதும், அதற்குப் பிறகும் வந்த தமிழக அரசுகள் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
வன்னியர் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்காக, மூத்த ஐஏஎஸ் அதிகாரி பி.வி.வெங்கடகிருட்டினன் தலைமையில் ஆணையம் அமைத்து ஆளுநர் அலெக்சாண்டர் ஆட்சியின் போது 1988-ம் ஆண்டு திசம்பர் 12-ம் நாள் ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், 1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த ஆண்டின் பிப்ரவரி மாதமே அந்த அரசாணை ரத்து செய்யப்பட்டது. அதுவே சமூகநீதிக்கு செய்யப்பட்ட பெருந்துரோகம். அதை இப்போதாவது திமுக தலைமையிலான அரசு சரி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 69% இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையிட்டது. அப்போதே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு இயக்கத் தலைவர்களுடன் அப்போதைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69% இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப் பட்டுள்ளது. 69% இட ஒதுக்கீட்டை காக்க வேண்டும் என்றால் அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.
தமிழகத்தை ஆளும் திமுக, சமூகநீதி தான் தனது தலையாயக் கொள்கை என்று கூறிவருகிறது. அதற்காக தேசிய அளவிலான அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறது. அத்தகைய அமைப்புக்கு சமூகநீதியை காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டப்படியாக மட்டுமின்றி, தார்மீக ரீதியிலும் உண்டு. சமூகநீதி மீதான தனது பிடிப்பை மெய்ப்பிக்க வேண்டுமானால், தமிழகத்தில் சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டிய நெருக்கடி திமுக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது சாத்தியமில்லாத ஒன்றும் அல்ல. பிஹார் மாநிலத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக ஒட்டுமொத்தமாக 45 நாட்கள் மட்டும் தான் செலவிடப் பட்டுள்ளன. அதற்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள போதிலும், அதற்கும் குறைவாகவே செலவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்புப் பணியில் 2.64 லட்சம் பிஹார் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப் பட்டனர்.
13 கோடி மக்கள்தொகை கொண்ட பிஹாரில் ரூ. 500 கோடிக்கும் குறைவான செலவில் 45 நாட்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடிகிறது என்றால், 7.64 கோடி மட்டுமே மக்கள்தொகை கொண்ட தமிழகத்தில் இன்னும் குறைவான செலவில், குறைவான நாட்களில் இன்னும் சிறப்பாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்பது உறுதி.
தமிழகத்தை ஆளும் திமுக சமூகநீதி பற்றி பேசிக் கொண்டிருந்தால் மட்டுமே போதாது. அதை செயலிலும் காட்ட வேண்டும். அதற்கான சிறந்தவழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான்.எனவே, இனியும் தயங்காமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை திமுக அரசு உடனடியாக நடத்த வேண்டும். அதற்கான தீர்மானத்தை வரும் 9-ம் தேதி தொடங்க விருக்கும் சட்டப்பேரவையின் துணை நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran