வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (17:38 IST)

திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும்: அன்புமணி வேண்டுகோள்

Anbumani
திரையரங்குகள் மீதான கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக திகழும் திரைத்துறை, வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஜொலிப்பது போல தோன்றினாலும், உள்ளுக்குள் இருளாகவே காட்சியளிக்கிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து மோதல்களால் திரைத்துறையே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்த் திரையுலகை இப்போது இருப்பதை விட பல மடங்கு வளர்த்தெடுக்க வேண்டியவர்களாலேயே அத்துறை முடங்கி வருவது வருத்தமளிக்கிறது.
 
இந்தியாவில் பாலிவுட்டுக்கு அடுத்தபடியாக தமிழ்த்திரையுலகம் தான் வணிகத்திலும், தொழில்நுட்பப் புரட்சி செய்வதிலும், புதுமைகளை புகுத்துவதிலும் முன்னணியில் உள்ளது. இவ்வளவு சிறப்புகளுடன் முன்னேற்றப்பாதையில் பயணிக்க வேண்டிய திரைத்துறை முட்டுக்கட்டையை எதிர்கொண்டிருக்கிறது.
 
நடிகர்களின் அதிக ஊதியம், உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் 16 ஆம் தேதிக்குப் பிறகு புதிய திரைப்படங்களை தொடங்குவதில்லை என்றும், நவம்பர் 1 ஆம் தேதி முதல் எந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பையும் நடத்துவதில்லை என்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் இந்த மோதல் அதன் வளர்ச்சிக்கு வழிவகுக்காது.
 
திரைத்துறை என்பது வாழ வழிவகுக்க வேண்டும்; ஆனால், பெரும்பான்மையினரின் தாழ்வுக்கு மட்டுமே திரைத்துறை வழிவகுக்கிறது என்பது கசப்பான உண்மை. 2024 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் 125 க்கும் கூடுதலான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் 4 திரைப்படங்கள் மட்டும் தான் தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டிக் கொடுத்துள்ளன. மீதமுள்ள 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் பெரும் இழப்பையே சந்தித்துள்ளன. அந்த வகையில் திரைத்துறையினருக்கு ஏற்பட்ட இழப்பு மட்டும் ரூ.700 கோடிக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது. இதை நிச்சயமாக தாங்க முடியாது.
 
தமிழ்த் திரையுலகத்தில் ஆடம்பரம் இருக்கும் அளவுக்கு ஆரோக்கியம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பது தான் அனைவரின் பதிலாக இருக்கும். ஒரு பெரிய திரைப்படத்தை தயாரிப்பதற்கு ஆகும் செலவில் கிட்டத்தட்ட 70% நாயகனின் ஊதியத்திற்கு செலவாகிறது. பிற நடிகர்களின் ஊதியம், தயாரிப்புச் செலவு ஆகியவை போக தொழிலாளர்களுக்கான ஊதியமாக வெறும் 5%க்கும் குறைவான தொகை மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
 
மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்கப்படும் திரைப் படங்கள் தோல்வியடையும் நிலையில், அதன் தயாரிப்பாளர்களுக்கு மீண்டு எழ முடியாத அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. தமிழ்த் திரையுலகில் காலம் காலமாக கோலோச்சி வந்த ஏராளமான நிறுவனங்கள் இப்போது படத்தயாரிப்பிலிருந்து விலகி விட்டன என்பதே இதற்கு சிறந்த சான்று ஆகும்.
 
இன்னொருபுறம் திரையரங்குகளின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் தமிழகத்தில் திரையரங்குகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1000 ஆக இருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் 250 திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில், இன்றைய நிலையில் 745 திரை அரங்குகள் மட்டுமே உள்ளன. அவையும் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. அதிகாரத்தை கைகளில் வைத்திருப்பவர்களின் ஆளுகைக்குள் திரையரங்குகள் சிக்கித் தவிப்பதால், அவர்களின் கடைக்கண் பார்வை கிடைக்காத தயாரிப்பாளர்களால் திரைப்படங்களை வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
 
பெரிய நட்சத்திரங்கள் நடித்து, பெரிய பட்ஜெட் படம் வெளியாகும் போது 70 முதல் 80 விழுக்காடு திரையரங்குகள் அந்த ஒரு படத்திற்கே ஒதுக்கப்படுகின்றன. இதனால் அதே தேதியில் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. குறிப்பாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருநாள்களின் போது அனைத்து திரையரங்குகளையும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த பெரிய பட்ஜெட் படங்கள் தான் ஆக்கிரமிக்கின்றன. இதனால் குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வெளியாவதற்கு முன்பாகவே இழப்பை சந்திக்கின்றன; தயாரிப்பாளர்களை கடனாளி ஆக்குகின்றன.
 
தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் திரையரங்குகள் கிடைக்காமல் முடங்கிக் கிடக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை மட்டும் 1500-க்கும் அதிகம் ஆகும். அந்தத் திரைப்படங்களை தயாரித்த வகையில் முடங்கிக் கிடக்கும் தொகை ரூ.4,000 கோடிக்கும் அதிகம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. திரைப்படங்கள் வெளியில் வராததால் சொத்துகளை இழந்தும், வட்டி கட்டியே திவாலாகியும் வீதிக்கு வந்த தயாரிப்பாளர்கள் ஏராளம். அவர்களின் கதைகள் கண்ணீரை வரவழைக்கும்.
 
தமிழ்த் திரையுலகம் எதிர்கொள்ளும் இந்த சிக்கல்கள் கடந்த வாரமோ, அதற்கு முந்தைய மாதமோ ஏற்பட்டவை அல்ல. தமிழ்த் திரையுலகின் அவல நிலை குறித்தும், அதைப் போக்க மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், உருவாக்க வேண்டிய விதிமுறைகள் ஆகியவற்றை வலியுறுத்தியும் 08.02.2020 ஆம் நாள் அன்றைய முதலமைச்சருக்கும், செய்தி விளம்பரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தேன்.
 
ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஐந்தாண்டுகள் கழித்து அதே நிலை தான் மீண்டும் ஏற்பட்டிருக்கிறது. அப்போது நான் வலியுறுத்தியவாறே புதிய விதிமுறைகள் வரையறுக்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் இப்போது வலியுறுத்தியுள்ளது. இதை அரசு கவனிக்க வேண்டும்.
 
தமிழ்த் திரையுலகம் தான் தமிழ்நாட்டுக்கு 5 முதலமைச்சர்களை வழங்கியது. அத்தகைய சிறப்பு மிக்க தமிழ்த் திரையுலகைக் காக்க வெளியிலிருந்து எவரும் வர மாட்டார்கள். திரையுலகைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தான் தங்களுக்குள் சில விஷயங்களை சமரசம் செய்து கொண்டு, திரைத்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான காலம் கடந்து கொண்டிருக்கிறது.
 
திரைத்துறையை பாதுகாக்க முதல் நடவடிக்கையாக நாயகர்களின் ஊதியம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும். தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு இதற்கு தீர்வு காணப்படவேண்டும். திரையரங்குகளில் திரைப்படங்களின் வெளியீடுகள் முறைப்படுத்தப்பட வேண்டும். பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வெளியாகும் போது, ஒரு படத்திற்கு அதிக அளவாக 250 திரையரங்குகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
 
அப்போது தான் ஒரே நேரத்தில் இரு பெரிய படங்கள் வெளியானால் கூட, மீதமுள்ள திரையரங்குகளில் 4 முதல் 5 சிறிய படங்களை திரையிட முடியும். அதேபோல், மக்களை திரையரங்குகளுக்கு வரவழைக்கும் வகையில், நுழைவுச்சீட்டு கட்டணத்தையும், பிற கட்டணங்களையும் குறைக்க வேண்டும். அதன் மூலம் அதிக அளவில் மக்களை வரவழைப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதற்கு திரைத்துறை முன்வர வேண்டும்.
 
திரைத்துறையைக் காப்பாற்ற அரசும் அதன் பங்களிப்பைச் செய்ய வேண்டும். திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் மீது 12% முதல் 18% வரை ஜி.எஸ்.டி வரி வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியாக 8% வசூலிக்கப்படுகிறது. இதனால், திரையரங்குகளுக்கான நுழைவுக்கட்டணம் சாதாரணமானவர்களால் செலுத்த முடியாத அளவுக்கு உச்சத்தை அடைந்துள்ளது.
 
கேளிக்கை வரியை குறைப்பது அல்லது முழுமையாக ரத்து செய்வதன் மூலம் கட்டணத்தைக் குறைத்து திரையரங்குகளுக்கு அதிக பார்வையாளர்களை வரவழைக்க முடியும். எனவே, திரையுலகைக் காக்க தமிழ்நாடு உள்ளாட்சி கேளிக்கை வரியை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
திரைத்துறையை சட்டமியற்றி காப்பாற்ற முடியாது. அதில் சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பதன் மூலமாக மட்டும் தான் திரைத்துறையையும் காப்பாற்ற முடியும்; அதை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க முடியும். எனவே, திரைத்துறையினர் ஒன்றுபட்டு வாழவும், முன்னேறவும் வலியுறுத்துகிறேன்
 
Edited by Siva