திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (09:16 IST)

மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது: அன்புமணி கோரிக்கை..!

Anbumani
மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது என்றும், விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு  143.5 கி.மீ நீளத்திற்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடுமாறு இந்திய தொடர்வண்டி வாரியத்தை தெற்கு தொடர்வண்டித்துறை  கேட்டுக் கொண்டிருப்பதாக DT Next ஆங்கில நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தெற்குத் தொடர்வண்டித்துறையின் இந்த முடிவு  நல்வாய்ப்புக்கேடானது; தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.
 
மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதை திட்டத்தை கைவிடுவதற்காக தெற்கு தொடர்வண்டித்துறை கூறியுள்ள காரணம் ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும். மதுரைக்கும், தூத்துக்குடிக்கும் இடையே போதிய சரக்குப் போக்குவரத்து இருக்காது என்பதால், இந்தப் பாதையில் தொடர்வண்டிப் போக்குவரத்து இலாபமானதாக இருக்காது என்று கூறப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறானது. மதுரை - தூத்துக்குடி இடையே தொழில்வடச்சாலை விரைவில் அமைக்கப்படவிருக்கும் நிலையில் இப்பாதையில் சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும்.  அதுமட்டுமின்றி, தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தூத்துக்குடி செல்லும் தொடர்வண்டிகளை இப்பாதையில் இயக்கலாம் என்பதால் புதிய பாதை இலாபகரமானதாகவே இருக்கும்.
 
ஒரு புதிய தொடர்வண்டிப்பாதை இலாபகரமானதாக இருக்க வேண்டுமானால், அதன் முதலீட்டை திரும்பப் பெறும் விகிதம் 10% ஆக இருக்க வேண்டும். ஆனால், இந்தப் பாதையில் அது 21.24% ஆக இருக்கும் நிலையில், புதிய பாதையை கைவிடுவது சரியானதாக இருக்காது.  அதுவும் ரூ.601 கோடியில்  143.5 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ள இந்தப் பாதையில் 32.35 கி.மீ நீளத்திற்கான பணிகள் நிறைவடைந்து விட்டன; நடப்பாண்டில் மட்டும் இந்தத் திட்டத்திற்கு ரூ.114 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இத்தகைய சூழலில் இந்தத் திட்டத்தைக் கைவிடுவது மிகவும் பிற்போக்கான முடிவாகவே இருக்கும். இதை இந்திய தொடர்வண்டி வாரியம் ஏற்கக் கூடாது.
 
தூத்துக்குடியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன; தமிழகத்தின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடியிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு அதிக சரக்குகள் கொண்டு செல்லப்படக் கூடும். இவற்றைக் கருத்தில் கொண்டு மதுரை - தூத்துக்குடி புதிய தொடர்வண்டிப் பாதையை கைவிடக் கூடாது; மாறாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல், தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பிற தொடர்வண்டித் திட்டங்களையும் விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran