புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2019 (12:07 IST)

எடப்பாடி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. மர்ம நபரை கைது செய்த போலீஸ்

முதலமைச்சர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 28 ஆம் தேதி, சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நள்ளிரவு 12 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், காலை அந்த வெடிகுண்டு வெடிக்கும் எனவும் ஒரு மர்ம நபர் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.

உடனே கட்டுப்பாட்டு அறை போலீஸார், உயர் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில், போலீஸாரும் வெடிகுண்டு நிபுணர்களும் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி வீட்டில் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.. சுமார் 1 ½ மணி நேரம் சோதனை நடத்திய பிறகு, எந்த வெடிபொருளும் சிக்கவில்லை.

இதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. அதன் பிறகு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சேலையூர் பராசக்தி நகர் 2 ஆவது தெருவைச் சேர்ந்த கார் டிரைவர் வினோத்குமார் என்பவர், தனது செல்ஃபோனில் இருந்து மிரட்டியுள்ளார் என தெரியவந்தது.

அதன் பின்னர், போலீஸார் வினோத்குமாரை பிடித்து வந்து விசாரித்தனர். அப்போது வினோத்குமார், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு மிரட்டல் விடுத்ததை ஒப்புகொண்டார். இதையடுத்து வினோத்குமாரை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் எதற்காக இவ்வாறு செய்தார் என கேட்டபோது, தனது மனைவியை காணவில்லை என்று போலீஸில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத்தால், ஆத்திரத்தில் இவ்வாறு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறினார்.