தனிக்கட்சி; பொதுச்செயலாளர் டிடிவி – என்ன சொன்னார் சசிகலா ?
அமமுக வைக் கட்சியாக பதிவு செய்வது என்றும் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமிப்பது என்றும் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்த மறுதினமான நேற்று அமமுகவின் பொதுக்குழு கூட்டம் அசோக் நகரில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது என்றும் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், அக்கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிப்பதாகவும் முடிவு எடுக்கப்பட்டது. தற்போது வரை அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா உள்ளார். துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பணியாற்றி வருகிறார்.
அமமுகவைக் கட்சியாகப் பதிவு செய்வது தொடர்பான மனுவை ஏப்ரல் 22 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் அளிக்க இருப்பதாகவும் அடுத்து வரவுள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பரிசுப்பெட்டி சின்னத்தையே தேர்தல் ஆணையத்தில் கேட்போம் என்று டிடிவி தினகரன் கூறினார். பின்னர் புதியக் கட்சிக்கு பொதுச்செயலாளராக நீங்கள் நியமிக்கப்பட்டது குறித்து சசிகலாவிடம் ஆலோசனைக் கேட்கப்பட்டதா எனப் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த டிடிவி ‘அவரிடம் கேட்டுதான் முடிவு எடுத்தோம். அவர்தான் தினகரன் கட்சியை ஆரம்பித்து மக்களுக்கு செயலாற்றட்டும். நான் சட்டப்போராட்டத்தை எதிர்கொள்கிறேன் எனக் கூறினார். அவர் வெளியில் வரும் கட்சியின் தலைவராகப் பதவியேற்பார். அதுவரை தலைவர் பதவி காலியாக வைக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.