1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 26 மே 2024 (12:19 IST)

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என நிர்வாகிகளுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்.
 
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கிய நடிகர் விஜய்,  மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும், 2026ம் ஆண்டு நடைபெறும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
 
இதைத் தொடர்ந்து 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் வருகிற மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 
 
இதை வலியுறுத்தி உலக பட்டினி தினமான வருகிற மே 28ம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

 
அனைத்து கிளை நிர்வாகிகள், உரிய தேர்தல் வழிகாட்டும் விதிமுறைகளை பின்பற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும் என்று புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.