1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 6 ஜூலை 2016 (18:04 IST)

திமுகவை மோடியின் ஆதரவோடு அதிமுக தோற்கடித்தது - கருணாநிதி

பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிககு ஓரளவிற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
 

 
திருவாரூரில் நடைபெற்ற திமுக தலைவர் கலைஞரின் 93ஆவது பிறந்தநாள் மற்றும் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. 
 
பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கலைஞர், "திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவிற்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. இங்கு பேசுவதற்கு உடல்நிலைகாரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை தொடர்ந்து செயல்படுத்துவேன்.
 
தற்போது ஏற்பட்டுள்ளது தோல்வி அல்ல. அதற்காக எந்த தொண்டரும், கட்சி நிர்வாகியும் சோர்வடைய தேவையில்லை. திருவாரூர் தொகுதியில் 2வது முறையாக மண்ணின் மைந்தர் என்ற உரிமையுடன் தேர்தலில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.
 
இந்த தேர்தலில் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 ஓட்டுக்கள் அளித்து வெற்றி வாய்ப்பை கொடுத்துள்ளீர்கள். திமுகவிற்கு கிடைக்க வேண்டிய வெற்றி பறிக்கப்பட்டு விட்டது.
 
மத்திய அரசின் செல்வாக்கை பெற்று, பிரதமர் ஆதரவை பெற்று திமுகவை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அதிமுக எடுத்த முயற்சிககு ஓரளவிற்கு வெற்றி கிடைத்துள்ளது.
 
தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையம் நியாயமாக செயல்படவில்லை. ஆளும் கட்சியான அதிமுகவிற்கு ஆதரவு அளித்தார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து சக்திகளும் செயல்பட்டன. திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது.
 
கடந்த தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை முடிவதற்குள்ளேயே பிரதமர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்பியது ஏன்?. இந்தியாவில் நடந்த தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன.
 
இப்போது தோல்வி படிக்கட்டில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெற்றி படிக்கட்டை நாம் மிதிக்க வேண்டும். சில ஆண்டுகளில் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்” என்று கூறியுள்ளார்.