வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 9 பிப்ரவரி 2022 (18:37 IST)

சனி விலகியதால் அதிமுக வெற்றி பெறும்: பாஜக குறித்து ஓ.எஸ்.மணியன்

சனி விலகியதால் இனி அதிமுகவுக்கு நல்ல காலம் என்றும் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றும் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் இது குறித்து மேலும் கூறியதாவது:
 
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புத் தேர்தலில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை அதிமுக பெறவுள்ளது. ஏனெனில், பொங்கல் பரிசுத் தொகுப்பு உட்பட பல்வேறு விவகாரங்களில் ஆளுங்கட்சியை அனைத்துத் தரப்பு மக்களும் விமர்சனம் செய்யும் நிலையில் தேர்தல் நடைபெறுகிறது.
 
அதேபோல், வழக்கமாக ஜாதகம் பார்க்கும்போது சனி, கேது என வேண்டாத கிரகங்கள் இருப்பதாக ஜோதிடர் கூறுவார். தற்போது அந்த வேண்டாத கிரகங்கள் எல்லாம் நம்மை பிரிந்த பிறகு, சுதந்திரமாக, நல்ல சகுணத்தில் தேர்தலைச் சந்திக்கிறோம். இது, இன்னொரு வகையில் அதிமுகவுக்கு வெற்றியாகும்.
 
நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் அதிமுகவின் கொள்கை. நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்களுக்கு சரியான தெளிவை ஏற்படுத்த திமுக அரசு முன்வர வேண்டும். சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேட்க நினைத்த 2 கேள்விகளை இங்கு கேட்கிறேன். இந்தியாவில் நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்யப் போகிறது?.
 
ஏற்கெனவே அனுப்பிய நீட் விலக்கு தீர்மானத்தை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பிவிட்டார். இப்போது ஆளுநர் திருப்பி அனுப்பியதையடுத்து, மீண்டும் நிறைவேற்றிய அனுப்பிய தீர்மானத்தை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பும்பட்சத்தில் அதை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொள்வாரா என்று முதல்வர் ஸ்டாலின் பதில் கூற வேண்டும்